அண்ணாமலைக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த அவர், பதவியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்து, பதவி உயர்வு பெற்று தமிழக பா.ஜ.க. தலைவராக அமர்ந்தவர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 12 லட்சம். வாக்கு சதவிகிதம் 2.86 தான். அதே போல, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுடன் சேர்ந்து 23 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
பா.ம.க.வும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 18 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதாக அண்ணாமலை கூறுகிறார். கூட்டணியில் போட்டியிடுகிற போது எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் என்பதை துல்லியமாக கூற முடியாது என்பதை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக இருக்கிற அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கிற பா.ஜ.க.வில் அண்ணாமலை தலைவராகி விட்டார். ஒன்றிய அரசில் பா.ஜ.க. இருப்பதனால் பண பலத்தை கொண்டு அரசியல் நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்த போது சுயமரியாதையோடு தான் நடத்தப்பட்டதே தவிர, பா.ஜ.க.வை போல காங்கிரஸ் கட்சி என்றைக்குமே அடிமைகளாக இருந்ததில்லை.
எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களே, உங்களது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்று சொன்னால் வருகிற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உங்களது மக்கள் விரோத போக்கிற்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.