மக்களே கவனம்.. இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான்: மாநிலம் வாரியாக பாதிப்பு விவரம்..!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது; அதில், 77 பேர் குணமடைந்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, டில்லி, கேரளா, தமிழகம், குஜராத், தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. அதில் 77 பேர் குணமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒமைக்ரான் வைரஸால் மகாராஷ்டிரா மற்றும் டில்லியில் தலா 54 பேரும், தெலுங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், உ.பி.யில் 2 பேரும், ஆந்திரா, சண்டிகர், தமிழகம், மே.வங்கத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.