மக்களே கவனம்..! தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மதுரையில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. ஈரோட்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையின் காரணமாக, கட்டிடங்கள் இடிந்து விழுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைகள் நிரம்பிவருகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியைத் தாண்டியவுடன் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது நீர்மட்டம் 69 அடியை நெருங்கியிருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2310 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீருக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சியானது மேற்கு வட மேற்கு திசையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாக இன்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் (நவம்பர் 9-ம் தேதி) இரண்டு நாட்களுக்கு கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.