1. Home
 2. தமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்..! வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: வராமல் தடுப்பது எப்படி?

1

சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. இது பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் ஒன்று ஆகும். கண்ணின் விழி வெண்படலத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் இது எளிதில் பரவக்கூடியது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் விற்கப்படும் சொட்டு மருந்து வாங்கி ஊற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பரவும் கண்வலி தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

 வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சேனை எழும்பூர் மருத்துவமனையில் 240 பேருக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு ‘மெட்ராஸ்-ஐ’ நோய் ஏற்பட்டால் குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் நிலை உள்ளது. கண்வலி ஏற்பட்டால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில்  10 நாட்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்ய உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

கண்கள் சிவந்து, கண்ணீர் பெருக்கெடுக்கும் இந்த நோய் வந்தாலே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். கண்கள் சிவந்து இருந்தாலே பலரும் நம்மைப் பார்ப்பதற்கு அஞ்சுவார்கள்.

அத்துடன் கண்களில் வலி எடுப்பதால் எந்த வேலையும் செய்ய முடியாமலே வேதனையில் துடிக்க வேண்டியிருக்கும். பலர் குளிர் கண்ணாடி அணிந்து இந்த வேதனையைக் குறைக்க முயற்சிப்பார்கள்.

ஒரு நபரின் மூக்கு அல்லது சைனஸில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மற்றவர்களின் கண்களுக்கு பரவி, தொற்றுநோயை ஏற்படுத்தும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது சரியான லென்ஸை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை காரணமாக மெட்ராஸ் ஐ வரலாம்.

பள்ளியிலோ அல்லது அதிக கூட்டமாக இருக்கும் இடத்திலோ நேரத்தை செலவிடுபவர்களுக்கு கண் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.

மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் என்ன?

 • ஒரு கண்ணோ அல்லது இரண்டு கண்களும் சிவந்து இருப்பது
 • கண்களில் எரிச்சல், வலி அல்லது அரிப்பு
 • கண் இமைகள் வீக்கம்
 • கண் இமைகள் ஒட்டுதல் (கண் இமைகள் அதிகப்படியான வெள்ளை நிறத்தினால திரவத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும், குறிப்பாக அதிகாலையில் எழுந்தவுடன்.)
 • அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியாது
 • கண்களில் இருந்து நீர் வெளியேற்றம்
 • பாக்டீரியாவால் கண்ணிமையில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. நோய்த்தொற்று கண் பார்வைக்கு பரவினால், பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
 • மெட்ராஸ் ஐ - யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம்
 • குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

மெட்ராஸ் ஐ-க்கு என்ன சிகிச்சை?

 • இந்த அறிகுறிகள் தென்படும் போது கண்களைத் தேய்க்கவோ, கண்களில் கைகளை வைக்கவோ கூடாது.
 • சுத்தமான துணி அல்லது கைக்குட்டையால் கண்களைத் துடைக்கவும்.
 • அடர்த்தியான நிறங்களில் கண்ணாடி அணிவது பாதிப்பில் இருந்து சிறிது நிவாரணம் அளிக்கலாம்.
 • காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
 • வைரஸால் ஏற்படும் பிரச்சனை பொதுவாக ஓரிரு வாரங்களில் குறையும்.
 • பாக்டீரியாவால் பிரச்னை ஏற்பட்டால், நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, சரியான மருந்தை, சரியான அளவு நாட்களுக்கு, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

மெட்ராஸ் ஐ ஏற்படாமல் தடுப்பது எப்படி?

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும். கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை குறைக்கலாம் என்பதோடு இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும், நீச்சல் குளங்களை பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது.

பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் துண்டுகள், கைக்குட்டைகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் . இதன் மூலம் தொற்று பரவால் தடுக்கலாம்.

வீட்டு வைத்தியம் செய்து நேரத்தை வீணடிக்காமல், பாதிப்பு சிறியதாக இருக்கும்போதே மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

Trending News

Latest News

You May Like