சென்னை மக்களே..! உங்கள் குடையை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் - தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் அளவு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் சுமார் 123 சதவீதம் அதிக மழை பொழிவை இந்த மாதம் எதிர்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 2ஆம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஏற்றதுபோலவே வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரம் அடைய உள்ளது. இதனால் இம்மாதம் தமிழகத்திற்கு நல்ல மழை பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை முன்னறிவிப்பு குறித்து தனது சமுக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, இன்று காலை முதல் சென்னையில் இருந்து டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் ராமநாதபுரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், சென்னை, பாண்டி, கடலூர் முதல் ராமேஸ்வரம் போன்ற கடலோர மாவட்டங்கள் அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்றும் அப்போது தென் தமிழகம் வெள்ளிக்கிழமை அதிரடியில் இணையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ராமநாதபுரம்- தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இன்று சென்னை மக்கள் உங்கள் குடை மற்றும் ரெயின்கோட் தவறாமல் எடுத்துச் செல்லுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.