மக்களே பயப்படாதீங்க.. மிதந்து வந்தது முதலை இல்லை: கலெக்டர் விளக்கம்..!

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“செங்கல்பட்டு மாவட்டம், வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அது மரக்கட்டை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்ததை முதலை என வதந்தி பரப்பி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக வெள்ள நீரில் முதலைகள் வராது என சொல்லப்படுகிறது. அப்படியே அது நடந்தாலும் முதலைகள் வாழ்ந்து வரும் பகுதியான முதலை பண்ணை மற்றும் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் வெள்ள நீரில் மூழ்கினால் மட்டுமே நடக்குமாம். மேலும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் முதலைகள் இனப்பெருக்கம் செய்வது வழக்கம். அந்த நேரத்தில் தான் முதலைகள் முட்டைகளும் இடுமாம். அதனால் இந்த படம் தவறானது என சொல்லப்படுகிறது.