டார்ச்சை லைட் ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு மக்கள் பிரியா விடை..!
கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர்.
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது. வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
72 குண்டுகள் முழங்க தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர்.