மக்களே உஷார்..! வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது! கொஞ்சம் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுங்க..!
கோவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது என அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா கூறி உள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக வைரஸ், டெங்கு காய்ச்சல்களுக்கு சிறப்பு வார்டுகள் அரசு மருத்துமனையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மழைக்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல், சோர்வு, இருமல் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதிக மழையின் போது வெளியில் செல்ல வேண்டாம் எனவும் தேங்கிய மழைநீரில் நடக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் வெளியில் போகும் போது முககவசம் அணிய வேண்டும். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும். டாக்டர்களின் அறிவுரைப்படி, மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதே போல பொதுமக்களுக்கு கோவை மாநகர காவல் துறையினரும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் இருசக்கர வாகனங்களை இயக்குவதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது கனரக வாகனங்களுக்கு அருகாமையில் செல்வதை தவிர்த்து 10 மீட்டர் இடைவெளி விட்டு பயணிக்கவும். இதன் மூலம் சாலையில் கிடக்கும் மழைநீர் வாகன ஓட்டிகளின் மீது படாமல் இருக்கும்.
மழைக்காலங்களில் சாலையில் வாகனத்தை இயக்கும்போது தேங்கிக் கிடக்கும் நீர் பாதசாரிகள் மீது படாதவாறு மெதுவாக வாகனத்தை இயக்கவும். மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் மீது கவனத்துடன் இருக்கவும்.
2 மழைக்காலங்களில் சாலையின் வளைவுகளில் மிக கவனமாகவும், நிதானமாகவும் திரும்ப முற்படுங்கள். வளைவுகளில் திரும்பும்போது திடீரென பிரேக் பிடிப்பதால் வாகனம் கட்டுப்பாட்டை இழக்க அதிக வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும். இது கவனக்குறைவை தவிர்க்கும்.