1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை..!

1

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். 

இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாசலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வாகனங்களில் இருப்பவர்களிடம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் தெர்மாமீட்டர் கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடந்து வருகிறது. தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like