மக்களே உஷார்..! சென்னையில் பரவும் 'ஸ்க்ரப் டைஃபஸ்' வைரஸ்!
சென்னை மக்களை ஸ்க்ரப் டைஃபஸ் வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாடு முழுக்கவே மழைக் காலம் தொடங்கியதிலிருந்து 11 வகையான வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் பலரை முடக்கிப் போட்டுள்ளது. இது இல்லாமல் பலர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஸ்க்ரப் டைஃபஸ் வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. பொதுவாக இந்த வைரஸ் காய்ச்சல் மலைக்கிராமங்களில்தான் அதிகம் இருக்கும். ஆனால், அதற்கு மாறாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்களை இந்த வைரஸ் தாக்கி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அது என்ன ஸ்க்ரப் டைஃபஸ் வைரஸ்? இது ஒருவகையான ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காடுகள், மலை அடிவாரங்களில் தாவரங்களில் உள்ள ஒட்டுண்ணி பூச்சிகள் கடிப்பதன் மூலம் 'ரிக்கட்சியா' எனப்படும் பாக்டீரியா பாதிப்பு வருகிறது. அதனால் ஸ்க்ரப் டைஃபஸ் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் ஆண்டுக்கு உலக முழுவதும் 10லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக உலகப்பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.
வழக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் இந்த நோய்த் தொற்று அதிகம் காணப்படும். அதேபோல் கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம் போன்ற மலையோர கிராமங்களிலும் இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த ஸ்க்ரப் டைஃபஸ் நோய் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களையும் அதிகம் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுமா? அதனால் பாதிப்பு வருமா? எனப் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இது குறித்து பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், "இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது. அதனால் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால், கட்டாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த உண்ணி பூச்சிகள் முட்புதர்களில்தான் உயிர் வாழும். ஆகவே அதன் அருகில் செல்வதைத் தவிர்க்கவேண்டும். வீட்டின் அருகே முட்புதர்கள் இருந்தால் அதை உடனே வெட்டி பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். குறிப்பாக மலையோர பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொது பூங்கா மற்றும் மரம் செடிகள் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்" என்று எச்சரித்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, நெறி கட்டுதல் போன்ற உபாதைகள் இருக்கும்.
லேசான காய்ச்சல் என யாரும் அலட்சியம் காட்டக்கூடாது. அது நிமோனியா பாதிப்பைக்கூடத் தரலாம் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக இந்த உண்ணி பூச்சிக் கடிக்கும் இடத்தில் சிகப்பு நிறத்தில் உடலில் ஒரு மாற்றம் உருவாகும். அந்தப் பகுதி வறண்டு காணப்படும். உடலில் தடுப்பு, தடுப்பான ஒவ்வாமை ஏற்படும். இது உடல் முழுவதும் பரவுவதால் ரத்தத்தில் கலந்து எந்த உறுப்பையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாகக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யலாம். அதனால் உயிர்ப்பலிகூட ஏற்படலாம் என எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்கள் மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள். ஆகவே, மக்களே மாலை நேரங்களில் புதர் மண்டியப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பொதுவாகச் செடி, கொடிகள் அடர்ந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.