மக்களே உஷார்..! இந்த செயல்களில் ஈடுபடுபவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்களை விற்பனை செய்வது, பதுக்குவது மற்றும் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறி செயல்படும் நபர்கள் மீதும் அதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என என கூறியுள்ளார்.
நம் நாட்டில் வாழும் மக்களில் கணிசமான சதவிகிதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை தரம் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதில் ஏழை, எளிய மக்கள் அவர்களின் தினசரி உணவிற்கு பொது விநியோக திட்டத்தினை பெரிதும் நம்பியுள்ளனர். அவர்களுக்கு அரசு இலவசமாக அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மாதந்தோறும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களின் அன்றாட உணவிற்கு தேவையான அவசியமான பொருளாகும். இத்தகைய அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவது, விற்பனை செய்வது மற்றும் கடத்துவது சமூகத்திற்கு எதிரான குற்றமாகும். எனவே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்களை விற்பனை செய்வது, பதுக்குவது மற்றும் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது தெரிவிக்கப்படுகிறது. மீறி செயல்படும் நபர்கள் மீதும் அதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள். மீதும் 1955 ஆம் ஆண்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் பிரிவு 6(அ), மற்றும் 7ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாகையில் தனியார் கல்லூரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2700 கிலோ அரிசி மூட்டைகள், பருப்பு, கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பொருள் கடத்த தடுப்பு பிரிவின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் உள்ள நியாயவிலைக்கடை மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி பருப்பு கோதுமை உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு அங்குள்ள தனியார் கல்லூரில் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் நாகை சேவாபாரதி ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்பு கோதுமை இருப்பு இல்லாததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியை அடைந்தனர். இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர் ராவணனின் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் கிடிக்கிபிடி போட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தனியார் கல்லூரியில் விற்பனை செய்து அது அங்கு பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர் நாகை அடுத்த பொரவச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவர் தனியார் கல்லூரிக்கு சென்ற அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருட்களை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதில் 55 மூட்டைகளில் 2700 கிலோ ரேஷன் அரிசி, 400 கிலோ கோதுமை, 150 கிலோ பருப்பு உள்ளிட்ட பொருட்களை கல்லூரி விடுதிக்கு பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமானது. அதனை தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரேஷன் கடை விற்பனையாளர் ராவணன், சரக்கு வாகன ஓட்டுனர் சுந்தர் ஆகிய இருவரையும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரேஷன் கடை உதவியாளர் ஆறுமுகம் மற்றும் கல்லூரியின் தாளாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். நாகையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன்கடை பொருட்களை தனியார் கல்லூரி நிர்வாகம் கடத்திச் சென்று அதனை பதுக்கி வைத்து பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால் பொது விநியோக திட்டத்தின் கீழ் பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதும், பதுக்குவதும் சட்டப்படி குற்றமாகும். இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட எந்த பொருளையும் பொது சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.