மக்களே உஷார்..! தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

பாரத் பெட்ரோலிய முனையம் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இயங்கி வருகிறது. பாரத் பெட்ரோலிய முனையத்தில் பெட்ரோலிய பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்காக 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளதாகவும், இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் இருந்து 15% வாடகையை குறைத்து நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டித்தும், வாடகையை உயர்த்தி தரக்கோரியும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன், பெட்ரோலிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏறக்குறைய 2 மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பெட்ரோலிய நிர்வாகத்தினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அதனை அறிவித்துள்ளனர். இதேபோன்று தண்டையார்பேட்டையில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் அத்திப்பட்டில் இருந்து இயக்கப்படும் டேங்கர் லாரிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது என சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறியுள்ளார்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும், இதற்கு ஆதரவாக மற்ற பெட்ரோல் முனையத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.