மக்களே உஷார்...! இன்று இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்..!
தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கே ஆர் எஸ் மற்றும் ஹாரங்கி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளார். இதே போல் ஹஸன் மாவட்டத்தில் உள்ள சிக்மங்களூர், ஹேமாவதி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வால்பாறை, நீலகிரி மற்றும் அவலாஞ்சி அப்பர் பவானி பகுதிகளில் இன்று கனமழை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதேபோல் மேட்டூர் அணை சுதந்திர தினத்திற்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மாலை அல்லது இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு குஜராத் கடற்கரை முதல் வடக்கு கேரளா வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவமழையின் தீவிரமே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.