மக்களே உஷார்..! இனி கடற்கரையில் குப்பைகளை வீசினால் உடனடி அபராதம்!

மெரினா கடற்கரையில் ஏராளமான குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தைத் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.
அப்போது தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, மெரினா கடற்கரையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பது போன்று தனது செல்போனுக்கு வந்த இரு புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி, காணும் பொங்கல் பண்டிகையின்போது மெரினா கடற்கரை குப்பை கூளமாகக் காட்சி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
கடற்கரையை எப்படி பாதுகாப்பது? என மக்களுக்குத் தெரியவில்லையென வேதனை அடைந்த நீதிபதி, காணும் பொங்கலுக்கு விடுமுறை அளிப்பதால் தானே இது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர் எனக் கடுமையாகச் சாடினார்.
இதன்பின்பு, காணும் பொங்கல் தினத்தன்று விடுமுறை அளிக்கக் கூடாது என அரசுக்குப் பரிந்துரைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.சண்முகநாதன், ‘குப்பைகளை வீசிச் செல்வதை குற்றமாகக் கருதி அபராதம் விதிக்காவிட்டால் இதைத் தடுக்க முடியாது.
படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்’ என்றார்.
இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் குப்பைகளை வீசிச் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தினங்களில் சிறப்புப் படைகளை அமைக்க அரசு வக்கீலுக்குத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
மேலும், இதுசம்பந்தமாகச் சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டது.