மக்களே உஷார்..! 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..!

சென்னை வானிலை மையத்தின் அறிக்கை
தமிழகத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, 2 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்தது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவும். நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஏப்ரல், 2 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையலாம். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும்.
நேற்று மதுரை, சேலம், கரூர் மாவட்டம் பரமத்தி, திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, வேலுார், ஈரோடு, தருமபுரி, சென்னை, கோவை நகரங்களில், வெயில், 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக சேலத்தில், 39.8, ஈரோடு மற்றும் மதுரையில் 39.6, சென்னையில் 39.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது