மக்களே உஷார்..! தமிழகம் முழுவதும் அக்.26ம் தேதி சிலிண்டர் டெலிவரிமேன்கள் வேலைநிறுத்தம்..!
குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாகவும், அகவிலைப்படி முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்க வேண்டும், சட்டப்படி வழங்கவேண்டிய தீபாவளி போனஸ் ரூ.12,000மாக வழங்க வேண்டும், ஒருநாள் சம்பளத்துடன் வார விடுமுறை வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கவேண்டும், வருடத்துக்கு 15 நாள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், இது குறித்து எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படாததால் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள் சிலிண்டர் டெலிவரிமேன்கள்.
வரும் அக்டோபர் 26ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாரத் கேஸ், இன்டேன், எச்.பி. உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மாநிலம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட டெலிவரி மேன்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன் தொழிற்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச போனஸ் தொகை 8.33% என்ற அடிப்படையில் 2024- ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் ரூ.12,000 என ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக வழங்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச அகவிலைப்படி முறையாக தொடர்ந்து உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு சம்பளத்துடன் ஒரு நாள் வார விடுமுறை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
வருடத்திற்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருடத்திற்கு 12 நாட்கள் சம்பளத்துடன் மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருடத்திற்கு 12 நாட்கள் சம்பளத்துடன் தற்செயல் விடுப்பு வழங்கப்பட வேண்டும். சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்களுக்குள் உதவிகள், தற்காலிகம் என்கிற எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் நுகர்வோர்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், மெக்கானிக், டிரைவர், குடோன் கீப்பர், சிலிண்டர் லோடுமேன்கள், அலுவலகப் பணியாளர் அனைவரையும் பணிமூப்பு அடிப்படையில் அந்தந்த கேஸ் ஏஜென்சியின் தொழிலாளர் பெயர்ப் பட்டியலில் சேர்த்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன், HP, பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் அனைத்து சிலிண்டர் டெலிவரி மேன்கள் வரும் அக் 26ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும், அடையாள வேலைநிறுத்தத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.