1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் உலா வரும் சீன பூண்டுகள்..!

1

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலை பிரதேசங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த பகுதியில் பருவமழை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு பூண்டு மகசூல் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ பூண்டு மட்டுமே அறுவடை செய்யப்பட்ட தாகவும் ஆனால் அதற்கான செலவு ரூ.3 லட்சம் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் பூண்டிலும் சீனாக்காரர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டுகள் குஜராத் வழியாக தமிழகத்துக்கு வருவதாக கூறப்படுகிறது.120 முதல் 150 டன் சீன பூண்டுகள் கண்டெய்னர்கள் மூலம் குஜராத் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரமளவு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படும்போது பூச்சி கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அந்த பூண்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் இப்போது ரகசியமாக கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், சீன பூண்டில் ஆறு மாதங்களுக்கு பூஞ்சை ஏற்படுவதை தடுக்க மெத்தில் புரோமைடு கொண்ட பூஞ்சைக் கொல்லியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இது தவிர, தீங்கு விளைவிக்கும் குளோரின் மூலம் வெளுக்க வைக்கப்படுகிறது. இதன் காரணமாக, பூண்டு நீண்ட காலங்களுக்கு வெள்ளையாகவும் மற்றும் பிரெஷ்ஷாக இருப்பது போல் தோன்றும்.

மீதில் புரோமைடு பூஞ்சைக் கொல்லி என்றால் என்ன?

மீதைல் புரோமைடு என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த, மணமற்ற, நிறமற்ற வாயு ஆகும், இது விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் பூஞ்சை, களைகள், பூச்சிகள், நூற்புழுக்கள் (அல்லது வட்டப்புழுக்கள்) உட்பட பல்வேறு வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. , மீத்தில் புரோமைடு அதிக அளவில் எடுத்துக் கொண்டால் மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் சுவாச செயலிழப்பு மற்றும் நுரையீரல், கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சேதம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.

பூண்டு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

சீன பூண்டு அளவில் பெரியது. அதன், தோல்களில் நீலம் மற்றும் ஊதா நிற கோடுகள் காணப்படும். அத்தகைய பூண்டை சந்தையில் வாங்குவதைத் தவிர்க்கவும். பூண்டில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியான பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நச்சு இரசாயனங்கள் அடங்கிய சீன பூண்டு ஆரோக்கியத்தை காலி செய்து விடும்.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி பாபு கூறியதாவது:-

ஊட்டி பகுதியில் விளையும் பூண்டு லேசாக கருப்பு மற்றும் பிரவுனாக இருக்கும். புகை பூண்டு என்றும் சொல்வார்கள்.இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வரும் பூண்டுகள் தூய வெண்மையாக இருப்பதால் மக்கள் அதையே விரும்பி வாங்குகிறார்கள்.இமாச்சலில் இருந்து வரும் பூண்டுகள் மலைப் பூண்டு எனப்படும். இதுதான் மருத்துவ குணம் உடையது. மத்திய பிரதேசத்தில் இருந்து வருவது நாட்டு பூண்டுகள் எனப்படும்.

Trending News

Latest News

You May Like