1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உள்ளதாம் ..!

1

உணவு பண்டங்களில் அபாயகரமான செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோபி மஞ்சூரியன், சிக்கன் - மட்டன் - மீன் கபாப்களில் செயற்கை நிறங்களை சேர்க்க உணவுத் துறை தடை விதித்துள்ளது.
 

சிறுவர்கள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்கள் சேர்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், கேக்குகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுவதாக மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கு சமீபகாலமாக புகார்கள் குவிந்தன.
 

இதையடுத்து, மாநிலம் முழுதும் கடந்த மாதம் 235 கேக் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
 

இதில், 12 மாதிரிகளில் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட கேக் வகைகள் சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
 

இதில், சிலவற்றில் 'அல்லுரா ரெட், சன்செட் யெல்லோ, எப்.சி.எப்., டார்ட்ராசைன், கார்மோசைன் உள்ளிட்ட அபாயகரமான செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியானது.
 

குறிப்பாக பிளாக் பாரெஸ்ட், ரெட் வெல்வெட் கேக்குகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்களால் அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய், அஜீரண கோளாறு, தலைவலி, சரும பிரச்னை, சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
 

எனவே, கேக் தயாரிப்போர், உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை உத்தரவை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை நிச்சயம்.
 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''கேக்குகளின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

''அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமிகள் சேர்க்கும் பேக்கரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Trending News

Latest News

You May Like