மக்களே தயாரா இருங்க.. டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், செல்போன் விலை ஏறப்போகுது..!
மக்களே தயாரா இருங்க.. டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், செல்போன் விலை ஏறப்போகுது..!

சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ள போதிலும், மூலப் பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் டிவி, ஏசி, ரெப்ரிஜிரேட்டர், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விலை அடுத்த மாதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கமல் நந்தி கூறியதாவது: “கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சரக்கு பெட்டகத்தின் விலை 2 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது கடந்த மாதம் 5 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. தற்போது, 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.
எனினும், ஜூன் நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம்தான். இது தவிர, மூலப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. அதனால், தயாரிப்பு பொருட்கள் குறிப்பாக டிவி, ஸ்மார்ட் போன், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் நாசமானதை அடுத்து, பாசுமதி அரிசி உள்ளிட்ட விளை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நூலிழை விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால், ஆயத்த ஆடைகளின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என, ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.