மக்களே நீலகிரி போறீங்களா ? அப்போ முகக்கவசம் கட்டாயம்..!
எச்எம்பிவி தொற்றால் அனைத்து மாநிலங்களிலும் நோய் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்டை மாநிலமான கர்நாடகாவில் எச்எம்விபியால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். எச்எம்பிவி தொற்று மட்டுமின்றி வழக்கமான காய்ச்சல் காலங்களிலும் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் தவிர பிற கட்டுப்பாடுகள் தொற்று பரவலை பொறுத்து அறிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
நீலகிரி என்பது மலை மாவட்டமாகும். அதோடு சுற்றுலா தலங்களில் முக்கிய இடமாக உள்ளது. கர்நாடகா, கேரளா எல்லையில் உள்ள இந்த மாவட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்தும் அதிகமானவர்கள் சுற்றுலா வந்து செல்கின்றனர். கர்நாடகாவில் தற்போது எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மிகவும் அவசியமாகும். இதனால் தான் நீலகிரி மாவட்ட மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.