மக்கள் அவதி..! தமிழகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு..!
பிரபல மென்பொருள் நிறுவனமான
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், தவித்து வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து விமான சேவை திடீரென முடங்கியது. இதனால், விமான பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, விமான நிறுவனங்கள் தங்களுடைய கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். ஒவ்வொரு பயணிக்கும் கைகளால் போர்டிங் பாஸ் எழுதிக் கொடுத்ததால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும், விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூரு மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஐதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள், சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய விமான நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாஃப்ட்வேரில் ஏற்பட்டுள்ள பிரச்னை சரியாகும் வரை, விமான சேவைகளில் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.