மக்கள் அதிர்ச்சி..! மின் கட்டணத்தை தொடர்ந்து சேவை கட்டணங்களும் உயர்வு..!
தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி, தேவாலயங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் கட்டணம் 4.83 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கமான மின் கட்டணத்தை விட இனி பொதுமக்கள் கணிசமான பணத்தை கூடுதலாக கட்ட வேண்டியதிருக்கும். அதேநேரம் இந்த கட்டண உயர்வு என்பது பெரும்பாலானோருக்கு 50 முதல் 100 ரூபாய் என்கிற அளவிலேயே அதிகரிக்கும். மிகப்பெரிய அளவில் மின்சாரம் பயன்படுவோருக்கு மட்டும் அதிகபட்சம் 600 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடுகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பு (சிங்கள் பேஸ் மின் இணைப்பு) வழங்க ரூ.1,020 கட்டணத்தை மின் வாரியம் இதுவரை வசூலித்து வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.1,070 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல் மும்முனை மின்சார இணைப்புக்கான கட்டணம் ரூ.1,535-ல் இருந்து ரூ.1,610 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு முனை இணைப்புக்கு மீட்டருக்கான முன்பணம் (டெபாசிட் கட்டணம்) ரூ.765-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்முனை இணைப்புக்கு மீட்டருக்கான டெபாசிட் கட்டணம் ரூ.2 ஆயிரத்து 45-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 145 ஆகவும் மின்வாரியம் அதிகரித்துள்ளது.
அதேபோல் மீட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஒரு முனை இணைப்புக்கு ரூ.1,020-ல் இருந்து ரூ, 1,070 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புக்கு ரூ,1,535-ல் இருந்து ரூ.1,610 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.