மக்கள் அதிர்ச்சி..! நாடு முழுவதும் விரைவில் ரயில்வே ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!
இந்திய ரயில்வே துறையில் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நாட்டை இணைக்கும் மிக முக்கிய பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு பல லட்சம் பயணிகள் ரயிலை பயன்படுத்தி இடம் பெயர்கிறார்கள். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையின் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 20 மற்றும் 21-ம் தேதிகளில் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் போராட்டம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 1974 ம் ஆண்டு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் 20 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குப் பிறகு அத்தகைய போராட்டம் எதுவும் நாட்டில் நடைபெற வில்லை. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு செய்துள்ளனர். அதற்குள் ஊழியர்களிடம் ரயில்வே துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.