மக்கள் அதிர்ச்சி..! இன்று முதல் ஆன்லைன் பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!
தமிழக அரசின் சாா்பில், பட்டா விவரங்கள் பற்றி அறியவும், பட்டாக்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழ் நிலம் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை இந்த இணையதளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை முகவரியில் பெற முடிகிறது.
நிலங்களை அளவீடு செய்தல், உள்பிரிவு மற்றும் உள்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களையும் ஆன்-லைன் வழியாக மேற்கொள்ளலாம். பட்டா, சிட்டா பாா்வையிட மற்றும் சரிபாா்க்க அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பாா்வையிட பதிவிறக்கம் செய்ய முடிகிது. 24 மணி நேரமும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை எங்கிருந்தும் அறிய முடியும். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்-லைன் மூலமாகவே செலுத்த முடியும். இந்த அளவிற்கு வசதிகள் உள்ளன.
அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழ் நிலம் வெப்சைட்டில் கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாக மென்பொருள் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதன்படி, இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைனிலேயே உட்பிரிவு பட்டா மாறுதல் பெற முடிகிறது. கடந்த ஆண்டு செய்யப்பட்ட அப்டேட்களின் படி, மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், இனி மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் குறைந்துள்ளது. மேலும், பட்டா மாற்றத்துக்காக மக்கள் மீண்டும் தனியேவிண்ணப்பிக்கவோ, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் செல்லவோ தேவையில்லை என்ற நிலைக்கு மாறி வருகிறது. அதேபோல் தமிழ் நிலம் வெப்சைட்டில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகள், பூங்கா போன்றவையும் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் பதிவுசெய்யப்படுகிறது. இதனால், அரசுநிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கப்படுகிறது. மேலும்,பொதுப் பயன்பாட்டு நிலங்களை மோசடியாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்றை செய்யப்போகிறது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. இதன் காரணமாக இணையவழி பட்டா சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விபரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், 28.12.2024 காலை 10:00 மணி முதல் 31.12.2024 மாலை 4:00 மணி வரை இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் ”தமிழ்நிலம்” (https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html) இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.