மக்கள் ஷாக்..! மெட்ரோ ரயில் கட்டணம் 47 சதவீதம் வரை உயர்வு..!
பெங்களூரு மக்களுக்கு இரட்டை சுமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் கட்டணம் அதிகபட்சமாக 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே தற்போது செலவிடுவதை விட ஒன்றரை மடங்கு கட்டணத்தை செலுத்தி வேண்டியிருக்கும்.
தற்போது பெங்களூரு மெட்ரோவில் தினசரி 8.5 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் லிமிடெட் (BMRCL) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நம்ம மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண அறிவிப்பின்படி முதல் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 ரூபாய் கட்டணம் அப்படியே தொடரும். அதன்பிறகான கட்டண விகிதங்கள் மாற்றப்படுகின்றன.
25 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்க அதிகபட்சமாக 90 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக சல்லகட்டா - ஒயிட்ஃபீல்டு இடையிலான பயணம் என்பது 44 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதற்கு வசூலிக்கப்பட்டு வந்த 60 ரூபாய் கட்டணம் இனிமேல் 90 ரூபாயாக வசூலிக்கப்படும். ஸ்மார்ட் கார்டு பயனாளர்களை பொறுத்தவரை டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீத சலுகை வழங்கப்படும்.
பீக் அல்லாத நேரங்களில் பயணம் செய்தால் கூடுதலாக 5 சதவீத சலுகை கிடைக்கும். ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் 10 சதவீதம் சலுகையுடன் பயணிக்கலாம். ஸ்மார்ட் கார்டில் குறைந்தது 90 ரூபாய் ரிசார்ஜ் செய்து வைத்திருப்பது அவசியம். கடைசியாக 2017ஆம் ஆண்டு நம்ம மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.