மக்கள் அதிர்ச்சி..! ஃபுல் டைம் போலீஸ் ஏட்டு...'பார்ட் டைம்' ஆக செயின் பறிப்பு..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது மாக்கினாம்பட்டி கிராமம். இங்குள்ள சாய்பாபா காலனியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற பெண் கடந்த 27-ம் தேதி தனது வீடு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ப நபர், இவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து உமா மகேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் சபரி (41) என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேலும் சில பெண்களிடம் தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே, போலீஸ் அதிகாரியே இப்படி செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட எஸ்.பி.உத்தரவிட்டார்.