அலறி ஓடிய மக்கள்..! குஜராத்தில் இரவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 என பதிவு..!
குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.வடக்கு குஜராத் மாவட்டங்களான பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மேசானா உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதாவது இரவு 10.15 மணியளவில் திடீரென்று பூமி அதிர்ந்துள்ளது. இதனால் வீடுகள் லேசாக குலுக்கி உள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்துள்ளன. 2 முதல் 3 நிமிடங்கள் வரை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு உடனடியாக வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். குஜராத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை காந்திநகரில் உள்ள நிலஅதிர்வு தொடர்பான ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ‛‛குஜராத்தில் 4.2 என்ற ரிக்டர் அளவில் இரவு 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பதான் பகுதியில் இருந்து தெற்கு மற்றுமு் தென்மேற்கு பகுதியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குஜராத்தில் எந்த உயிரிழப்பும், பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.