1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் நிம்மதி..! எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்..!

1

தென் மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர்.

மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.

2025 முதல் 2030ஆம் ஆண்டுகளுக்கான புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டு இருந்தன. அதில் எல்பிஜி லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த விதிமுறைகளைத் தளர்த்தக் கோரி மூன்று கட்டங்களாக எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த 27 ஆம் தேதி தென் மண்டல அளவில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதற்கு மத்தியில் கோவையில் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக நேற்றும் (மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், தென் மாநிலங்ங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றதை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like