தேர்தல் பிரச்சாரத்தை விட தொகுதி மக்கள் தான் முக்கியம் : அஞ்சலி செலுத்த வண்டியை திருப்ப சொன்ன கதிர் ஆனந்த்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியோருடன் வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். அப்போது, ஏரியில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பெண்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த செய்தியை அறிந்த மதசார்பற்ற இந்தியா கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்ற கழக வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு.கதிர் ஆனந்த் அவர்கள் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இவருடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பிரதீஷ் , கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சீதாராமன், குடியாத்தம் தெற்கு கழக செயலாளர் அன்பரசு மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.
ஒரு புறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கதிர் ஆனந்த் பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் மக்கள் நல்ல ஆதரவை தந்து வேட்பாளரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இளைஞர் அணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது அவருக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில் வேலூர் தொகுதி மக்களுக்கு தாம் செய்த பணிகளையும், திமுக சாதனையும் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறு தீவிர பிரச்சாரத்துக்கு நடுவே கதிர் ஆனந்த் அவர்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் இவர்களது பிரிவால் வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இத்துயரத்திலிருந்து மீண்டு வர என்றும் கழகம் துணை நிற்கும் என்றார்.
பிரச்சாரத்தை பாதியில் விட்டுவிட்டு தொகுதி மக்களின் துயரத்தை துடைக்க வந்த எம்.பி கதிர் ஆனந்த்-ஐ மக்கள் பாராட்டி வருகின்றனர்.