குழப்பத்தில் மக்கள்..! நாளை டெல்லி சுதந்திர தின விழாவில் யார் கொடி ஏற்றுவது?
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். நாளை மறுநாள் (ஆக.,15) சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. ஆனால், கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் இதற்காகச் சிறையிலிருந்து வெளியே வந்து கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாகப் பொது நிர்வாகத் துறை அமைச்சர் கோபால் ராய், கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினேன். சுதந்திர தின விழாவில் அமைச்சர் அதிஷி, தேசியக் கொடியேற்றுவார் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்ரசல் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோருகிறேன்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த பொது நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுதந்திர தின விழாவில் அதிஷி கொடி ஏற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் கோபால் ராய்க்கு பதிலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விதிகளுக்கு முரணாக இருக்கும் வாய்வழி உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகாது; எனவே நடவடிக்கை எடுக்க இயலாது. சுதந்திர தின விழாவில் முதல்வரின் பங்கேற்பு குறித்து அவரது அலுவலகத்துக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் சிறையில் இருப்பதால் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்னை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறது. இருப்பினும், சத்ரசல் மைதானத்தில் அனைத்து துறையினருடனும் இணைந்து சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது’ எனத் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் சுதந்திர தின விழா நடைபெற உள்ள நிலையில், யார் தேசியக்கொடி ஏற்றுவார் என்ற கேள்விக்கு விடை தேடி வருகிறது டில்லி ஆம்ஆத்மி கட்சி.
இது தொடர்பாக முன்னாள் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் அல்லது அமைச்சர் தான் கொடியை ஏற்ற வேண்டும். இதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால், டில்லி கவர்னரிடமிருந்து ஜனநாயகம், அரசியலமைப்பு பற்றி எதிர்பார்ப்பது தவறு. சர்வாதிகாரத்தை மட்டுமே அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்” என்றார்.