‘பென்சிலின் ஜி’ வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு..!
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபாட், தங்கள் பொருட்களை உலகம் முழுதும் வினியோகித்து விற்பனை செய்து வருகின்றன. நம் நாட்டில், அபாட் இந்தியா என்ற பெயரில் செயல்படுகிறது. இங்கு விற்பனையாகும் மருந்துகளில் பெரும்பாலானவற்றை இந்த நிறுவனம் தான் தயாரிக்கிறது.
இந்நிலையில், தங்கள் பென்சிலின் மருந்தான ‘பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200’ ஆகிய மாத்திரைகளின் விற்பனை மற்றும் வினியோகத்தை நிறுத்தும்படி அபாட் நிறுவனம் தாமாக முன்வந்து அறிவுறுத்தியுள்ளது.
பாக்டீரியா தொற்றுக்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்துகள், நுரையீரல், தொண்டை, மூக்கு, தோல் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
பென்டிட்ஸ் மருந்துகள், அந்த நிறுவனத்தின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் மருந்து தயாரிக்கும் ‘அக்கும் டிரக்ஸ் மற்றும் பார்மசியூட்டிக்கல்ஸ்’ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை என கூறப்படுகிறது.
இது குறித்து, மொத்த விற்பனையகங்கள், மருந்து கிடங்குகளுக்கு அபாட் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அபாட் இந்தியா தயாரிப்பின் பென்டிட்ஸ் மாத்திரை வில்லைகளில் இருக்கும் அட்டைகளில், காற்று அதிகம் நிரம்பி சற்று வீங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, உற்பத்தியாளர்கள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை.
எங்களுக்காக மருந்து தயாரித்து தரும் நிறுவனத்திடம் இது குறித்து கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த மருந்து திரும்பப் பெறப்படுகிறது. இந்த நடவடிக்கை, அபாட் இந்தியா நிறுவனத்தின் மற்ற மருந்துகள் மற்றும் இதற்கு மாற்றாக இருக்கும் மருந்துகள் எதையும் பாதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, இந்த நிறுவனம் தங்கள் ஆன்டாசிட் டைஜீன் ஜெல் மற்றும் தைரோனார்ம் ஆகியவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது. அதேபோல், பிரான்ஸ் நாட்டு சனோபி நிறுவனம், அலெக்ரா மற்றும் காம்பிபிலாம் ஆகியவற்றை இந்திய சந்தையில் இருந்து தாமாகவே திரும்பப் பெற்றது.
கடந்தாண்டு, இந்த நிறுவனம் தங்கள் ஆன்டாசிட் டைஜீன் ஜெல் மற்றும் தைரோனார்ம் ஆகியவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது. அதேபோல், பிரான்ஸ் நாட்டு சனோபி நிறுவனம், அலெக்ரா மற்றும் காம்பிபிலாம் ஆகியவற்றை இந்திய சந்தையில் இருந்து தாமாகவே திரும்பப் பெற்றது.