இந்த 2 பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி இதற்கு தனி சார்ஜ்!

வாங்கும் சம்பளம் செலவுக்கு போதாமல் இருப்பதால் மக்கள் பலர் கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பல வங்கிகள் மக்களை கிரெடிட் கார்டு பயன்படுத்த வைக்க பல்வேறு சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாக, கிரெடிட் கார்டுகளை வழங்கும் பல நிறுவனங்கள் தங்கள் ரிவார்டு திட்டங்களை மாற்றி வருகின்றன. ரிவார்ட்ஸ் பெறும் விஷயங்களின் பட்டியலிலிருந்து சில யூட்டிலிட்டி கட்டணங்களுக்கு குறிப்பாக மக்களின் அடிப்படை சேவைகளுக்காக செலுத்தும் பில்கள், காப்பீடு மற்றும் வீட்டு வாடகை போன்றவற்றின் கிரெடிட் கார்டு பேமெண்ட்களுக்கு வழங்கும் ரிவார்ட் பாயின்ட்களை வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அகற்றியுள்ளன.
அந்த வரிசையில் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யூட்டிலிட்டி பில்களுக்கு மொத்தம் ரூ.15,000க்கு மேல் கட்டணம் செலுத்தினால் 1% சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்து வசூல் செய்யும் என தெரிவித்துள்ளது.ஆனால், உங்களிடம் யெஸ் பேங்க் இன் பிரைவேட் கிரெடிட் கார்டு இருந்தால், இந்த கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
எனவே, உங்களின் மொத்த பயன்பாட்டுக் கட்டணம் (எரிவாயு, மின்சாரம், இணையம் மற்றும் இன்சூரன்ஸ்) ஒரு மாதத்தில் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது . ஆனால் நீங்கள் 15,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தால், கூடுதல் தொகைக்கு 1% கட்டணம் மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
அதே போல ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்களின் மொத்த யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள் ரூ. 20,000க்கு மேல் இருந்தால் மட்டுமே 1% மற்றும் ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது.உங்களிடம் ஃபர்ஸ்ட் பிரைவேட் கிரெடிட் கார்டு, எல்ஐசி கிளாசிக் கிரெடிட் கார்டு அல்லது எல்ஐசி செலக்ட் கிரெடிட் கார்டு இருந்தால் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது.
எனவே, ஒரு மாதத்தில் உங்களின் மொத்த யூட்டிலிட்டி கட்டணம் ரூ. 20,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் நீங்கள் 20,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தால், கூடுதல் தொகைக்கு 1 % கட்டணம் மற்றும் 18 % ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.