தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் : பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு..!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ``இது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்னை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க.,வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளும் கலந்துகொள்ளும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், ' தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என, பல மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதன்படி இந்த கடிதம் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், பினராயி விஜயன், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பக்வந்த் மான், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க மூத்த தலைவர்கள் கனிமொழி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தயாநிதி மாறன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளை நடைபெறும் தொகுதி மறு வரையறை கூட்டத்தில் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.