சோகத்தில் ஆழ்ந்த பட்டுக்கோட்டை : 10 ரூபாய் மருத்துவர் ரத்தினம் மறைவு..!

'பத்து ரூபாய் டாக்டர்' என்று அழைக்கப்பட்ட ரத்தினம், மருத்துவரான காலத்திலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவங்கள் பார்த்துள்ளார்.
பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தது மட்டுமல்லாமல் ஏழை, எளியவர்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொண்டதால் மனிதநேய மருத்துவர் என்றும் அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ”பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பெரியத் தெருவில் டி.ஏ.கே. என்ற பெயரில் கிளினிக் நடத்தியவர் டாக்டர் ரத்தினம். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார். யாராக இருந்தாலும் ரூ.10 மட்டும் கட்டணம் வாங்குவார்.
பத்து ரூபாய் கூட கொடுக்க முடியாத ஏழைகளும் இவரிடம் வருவார்கள். அவர்களது முகத்தை பார்த்ததும் வறுமையை உணர்ந்து கட்டணம் வாங்காமல் அனுப்புவார்." என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். சிகிச்சைக்கு மாத்திரை மட்டும் அல்லாமல் மருத்துவரின் அன்பும், அக்கறையும் அவசியம் என்பார்கள். ஆனால் இவர் நடந்து கொண்ட விதத்தால் `மனிதநேய மருத்துவர்’ என்கிற பெயரை மக்கள் இவருக்கு கொடுத்தனர். நாளடைவில் பட்டுக்கோட்டையின் அடையாளமாகவும் மாறினார். கைராசிக்காரர் என மக்களால் நேசிக்கப்பட்டவர். இவர் நேற்று (ஜூன் 07) வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவரது உடல் நாளை அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.