மதபோதகர் ஜான் ஜெபராஜ் மூணாறில் கைது..!

சமூக வலைத்தளங்களில் தனது ஆடல், பாடல்களுடன் கூடிய போதனைகள் மூலம் பிரபலமானவர் மதபோதகர் ஜான் ஜெபராஜ் (35). இவர் தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்தவர். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கோவையில் 'கிங் ஜெனரேஷன்' கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம்' என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2 சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த பாலியல் வழக்கில் இவர் சிக்கியது சமூக வலைதளங்களில் ஜான் ஜெபராஜை பின் தொடருபவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி, போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இந்த விசாரணைக்காக போலீசார் அவரை தேடிவந்த நிலையில் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல்துறை சார்பில், அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஜான் ஜெபராஜ் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் மூணாறில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை நேற்றிரவு கைது செய்தனர்.
இதையடுத்து அவரை கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஜான் ஜெபராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.