ஏசி மின்சார ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை 135 ரூபாய் பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கி ஏறத்தாழ 3 மாதங்களான நிலையில், அதை பொதுமக்கள் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான நேரங்களில் இந்த மின்சார ரயிலில் ஈயடிக்க கூட ஆள் இல்லாமல் காற்று வாங்குகிறது. யாரும் அதில் பயணிப்பதில்லை. கூடுதல் கட்டணம் காரணமாக ஏசி மின்சார ரயிலின் வாசற்படியில் கால்வைக்கக் கூட பயணிகள் பயப்படுகின்றனர். இந்த மின்சார ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒரே நேரத்தில் 1,220 பேர் பயணிக்க முடியும்
ஆனால் கூடுதல் கட்டணம் காரணமாக ரயில் சேவை தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் 50% இருக்கைகள் கூட நிரம்ப வில்லை. இதனால் ரயில்வேக்கு வருவாய் இழப்புதான் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலை போல புறநகர் மின்சார ஏசி ரயிலில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஏசி மட்டுமன்றி பயணிகளின் வசதிக்காக ரயிலில் மின் விசிறியும் அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் கூலிங் இருந்தாலும் அதைப் பயணிகள் முழுமையாக அனுபவிப்பது இல்லை.
சமீபத்தில் கூட ஏசி மின்சார ரயிலின் அளவு அதிகமாக இருந்ததால், அது நடைமேடையில் உரசியபடி சென்றது. இதனால் ரயில்வே பணியாளர்கள் சுத்தியல் கொண்டு அடித்து அதன் ஓரத்தை சரி செய்தனர். இந்த நிலையில் மின்சார ரயில் கட்டணத்தை குறைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.