1. Home
  2. தமிழ்நாடு

பயணிகள் அதிர்ச்சி..! பஸ் டிக்கெட் விலை ரூ.41-ல் இருந்து ரூ.50 ஆக உயர்வு..!

1

மதுரை மண்டலம் சார்பில் சுமார் 32 அரசு பேருந்துகள், திருநெல்வேலி மண்டலம் சார்பில் 60 அரசு பேருந்துகள், கோவை மண்டலம் சார்பில் சுமார் 9 அரசு பேருந்துகள் தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கமாக இதே வழித்தடத்தில் திருச்செந்தூரில் இருந்து மேலக்கரந்தை, அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இந்த வழித்தடத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு ரூ.172 பயணக் கட்டணமும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ.133 பயணக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களின் பயணக் கட்டணம் கணிசமாக சத்தமில்லாமல் அறிவிப்பின்றி உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து ஆத்தூருக்கு 20 நாட்களுக்கு முன் ரூ.17 என இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ.20 ஆகவும், ஆறுமுகநேரியில் இருந்து ஸ்பிக்நகருக்கு ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், ஆத்தூரில் இருந்து ஸ்பிக் நகருக்கு ரூ.15-ல் இருந்து ரூ.10 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எப்போதும் வென்றானுக்கு ரூ.23-ல் இருந்து ரூ.30 ஆகவும், தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் வரை ரூ.41-ல் இருந்து ரூ.50 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மண்டேலா நகருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 ஆகவும், மேலக்கரந்தையில் இருந்து மாட்டுத்தாவணிக்கு ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், “தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்த்தும் போது பொதுமக்களுக்கு முன்கூட்டி அறிவிப்பு செய்த பின் உயர்த்துவது வழக்கம். தற்போது 20 நாட்களுக்கு முன் மதுரை மண்டலம் முழுவதும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பேருந்து கட்டண உயர்வை அரசு பரிசீலனை செய்து பழைய கட்டணத்தை பேருந்துகளில் வசூலிக்க வேண்டும்,” என்றார்.

Trending News

Latest News

You May Like