நாடு முழுவதும் பகுதி சந்திர கிரகணம்..! எப்போ தெரியுமா ?

வரும் 28, 29-ம் தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது என வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் இந்தப் பகுதி சந்திர கிரகணம் தெரியும்.
இந்த கிரகணம் 29-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணி 05 நிமிடத்துக்குத் தொடங்கி அதிகாலை 2 மணி 24 நிமிடத்துக்கு முடிவடையும். இந்த கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
அடுத்த சந்திர கிரகணம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி அன்று இந்தியாவில் தெரியும். ஆனால், அது முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்தியாவில் கடைசியாக கடந்த (2022) ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று முழு சந்திர கிரகணம் தென்பட்டது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போதும், மூன்றும் ஒரே திசையில் வரும் போது பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலாவும் பூமியின் நிழலின் கீழ் வரும் போது முழு சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலில் வரும் போது மட்டுமே பகுதி சந்திர கிரகணமும் நிகழும்.