1. Home
  2. தமிழ்நாடு

பார்க்கிங் பிரச்சனைக்கு வந்தாச்சு தீர்வு..! இனி செல்போன் மூலம் பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்..!

1

சென்னையில் தனிநபர் வாகன பயன்பாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் (Smart Parking) திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

இதில், வரும் செப்டம்பர் முதல் அண்ணா நகரில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான 2 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பார்க்கிங் கட்டணம்:

இதில், சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் 10 நிமிடத்திற்கு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. தொடர்ந்து, 10 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் நிறுத்தப்பட்டால், ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் கீழ்கண்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வ.எண் வாகனம் பார்க்கிங் கட்டணம் (ஒரு மணி நேரத்திற்கு)
1 சரக்கு வாகனம்                                  ரூ.60
2 கார்                                  ரூ.40
3 இரு சக்கர வாகனம்                                  ரூ.20

மேலும், கட்டணம் செலுத்தாமல் 3 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிற்கும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினரால் பூட்டு போடப்படும். தொடர்ந்து, 6 மணி நேரம் நிற்கும் வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் அருகில் உள்ல காவல் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் முன்பதிவு:

செல்போன் செயலி மூலம் முன் கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். யுபிஐ (UPI) அல்லது ரொக்கப் பரிவர்த்தனை முறைகளில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் 100 பணியாளர்களுக்கு, கேமராக்களும் வழங்கப்பட உள்ளன.

கட்டணம் வசூலிக்கப்படும் நேரம்:

காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. தேவைப்படுபவர்களுக்கு மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்கப்படுகிறது.

அண்ணா நகரில் உள்ள முதன்மை சாலைகள் மட்டுமின்றி, குடியிருப்பு சாலைகளும் இந்த ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பார்க்கிங் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும். அண்ணா நகரைத் தொடர்ந்து படிப்படியாக பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like