பெற்றோர்களே உஷார்..! வேகமாக பரவும் 'வாக்கிங் நிமோனியா'..!

கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
குளிர்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் என்றாலும், வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகள் சிகிச்சைக்கு வந்ததை அடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், அந்த குழந்தை களுக்கு 'மைக்கோபிளாஸ்மா' எனும் பாக்டீரியாவால் நிமோனியா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது, 'வாக்கிங் நிமோனியா' என, அழைக்கப்படுகிறது. வழக்கமாக, இந்த பாக்டீரியாக்கள், 5 முதல் 17 வயது வரை உள்ளவர்களை தாக்கும் நிலையில், இந்த முறை 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளிடையே இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் பெரியவர்களுக்கும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், தோல்களில் வெடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற அறிகுறிகள் ஐந்து நாட்களுக்கு மேல் இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுமாறு கேரள சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று வாயிலாக மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், குழந்தைகள் இடையே இந்த பாக்டீரியா பரவுவதால், பள்ளிகள், டியூஷன் சென்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில், அவர்களுக்கு முகக்கவசத்தை அணியுங்கள் என்றும், மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.