1. Home
  2. தமிழ்நாடு

பேப்பர் மில் சாலைக்கு ஆம்ஸ்ட்ராங்க் பெயரைச் சூட்ட வேண்டும்- சீமான்..!

Q

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார்.
தமிழர்கள் சாதிகளாக பிரிந்து, பிளந்து கிடப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் மீட்சிக்கும், எழுச்சிக்கும் மிகப்பெரிய இடையூறு என்பதை சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் நன்கு உணர்ந்து ‘இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இப்படி சாதி, மதங்களாக பிரிந்து நிற்கப்போகிறோம்?’ என்ற கேள்வியை மக்களிடத்தில் தொடர்ச்சியாக எழுப்பியவர். ‘தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது’ என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர். 
அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் ஆற்றிய சமூகப் பணிகள்தான், இத்தனை இலட்சம் மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும்.
ஆகவே, மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பெரம்பூர் காகித ஆலை (பேப்பர் மில்) சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி நினைவைப் போற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

Trending News

Latest News

You May Like