இன்று பாபமோசனி ஏகாதசி : இன்று விரதம் இருந்தால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்..!

விரதங்களில் மிகவும் உயர்ந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது ஏகாதசி விரதம் என இந்து புராணங்கள் சொல்கின்றன. வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி விடும் என்பது உண்மை தானா என்ற சந்தேகம் பலருக்கும் பல காலமாக இருந்து வருகிறது. ஏகாதசி விரதம் இருந்தால் எப்படி பாவங்கள் நீங்கும் என்பதை பாபமோசனி ஏகாதசி விரத கதை நமக்கு புரிய வைக்கும்.
ஏகாதசி என்பது பெருமாளுக்குரிய திதியாகும். திதிகளில் 11 வது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் வீதம் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இவற்றின் பெயர்களிலேயே அந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபமோசனி ஏகாதசி என்று பெயர். பக்தர்களின் பாவங்களை போக்கக் கூடிய மிகவும் புனிதமான விரத நாள் இதுவாகும்.
பாபமோசனி என்பதில் பாபம் என்றால் ஒருவர் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்கள். மோசனி என்றால் பாவங்களை அழிப்பது என்று பொருள். பாபமோசனி என்பது ஒருவர் செய்யும் பாவங்களை அழிக்கக் கூடிய ஏகாதசி என்று பொருள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி இந்த ஆண்டு இன்று மார்ச் 25ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. அன்று பெருமாளுக்கு மிகவும் உகந்த திருவோண நட்சத்திரத்துடன் இணைந்து வருவது இன்னும் விசேஷமானதாகும். அன்று அதிகாலை 01.23 மணி துவங்கி, மார்ச் 26ம் தேதி அதிகாலை 12.27 மணி வரை ஏகாதசி திதி உள்ளது. இந்த நாளில் குறிப்பிட்ட 8 விஷயங்களை செய்வதால் பெருமாளின் அருளால் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும், தடைகளில் இருந்தும் விடுபட முடியும். அதோடு பெருமாளின் அருளும், செல்வ வளமும் தரக் கூடிய புனிதமான விரதம் இதுவாகும்.
புராணங்களின் படி, பாபமோசனி ஏகாதசி விரத மகிமை குறித்த கதையை பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு விளக்கினார். அவர் கூறிய கதையின் படி, மிகப் பெரிய சிவ பக்தரான மேதாவி முனிவர், சைத்ரரதா என்ற வனத்திற்கு சென்று கடும் தவம் இருந்தார். அவரின் தவத்தை கெடுக்க நினைத்த காமதேவன், மஞ்சுகோசா என்ற அப்சரசை அனுப்பி மேதாவி முனிவரின் தவத்தை கலைக்க முயற்சி செய்தார். பல முறை முயற்சி மேதாவி முனிவரின் தவத்தை கலைத்தாள் மஞ்சுகோசா. அவளின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்தார் மேதாவி முனிவர். பிறகு சொர்க்கத்திற்கு திரும்பி செல்வதற்காக மேதாவி முனிவரிடம் அனுமதி கேட்டாள் மஞ்சுகோசா. அப்போது தான் தன்னுடைய தவறை உணர்ந்து, தன்னிலைக்கு வந்த மேதாவி முனிவர், தன்னுடைய தவத்தை கலைத்து, புனித தன்மையை இழக்க செய்த மஞ்சுகோசாவை கொடூரமான காட்டேரியாக ஆகும் படி சாபம் அளித்தார். அவரிடம் சாப விமோசனம் கேட்ட கதறிய மஞ்சுமோட்சாவிடம், பாபமோசனி ஏகாதசி விரதம் இருக்கும் படி அறிவுறுத்தியதுடன், தானும் அந்த விரதத்தை இருந்தால் மேதாவி முனிவர். இருவரும் தங்களின் பாவங்களில் இருந்து விடுபட்டனர்.
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையாக நீராடி, வீட்டையும் சுத்தம் செய்து, விஷ்ணு மற்றும் லட்சுமி படங்களுக்கு பூ போட்டு அலங்கரித்து, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். மஞ்சள் நிற மலர்கள், துளசி படைத்து வழிபடுவது சிறப்பு. பெருமாளுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபட வேண்டும். மாலையில் ஏதாவது நைவேத்தியம் படைத்து பெருமாளை வழிபட வேண்டும். முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவுகளை தவிர்த்து, பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய"
"ஓம் நமோ லட்சுமி நாராயணாய நமஹ"
" ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"
ஆகிய மந்திரங்களை எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
ஏகாதசி விரதம் எப்படி இருந்தால் பாவங்கள் நீங்கும் ?
ஏகாதசி விரதம் இருக்கும் அனைவரின் பாவங்களும் நீங்கி விடுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. வெறும் உபவாசமாக இருந்து, பெருமாளை வழிபட்டு, விரதம் இருப்பதால் மட்டும் பாவங்கள் தீர்ந்து விடாது. எவர் ஒருவர் தான் கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக மன வருந்தி, அதில் இருந்து விடுபட வேண்டும் என உண்மையாகவே விரும்பி, பெருமாளின் பாதங்களை சரணடைந்து, அவரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிறாரோ அவரின் பாவங்கள் மட்டுமே நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும். அதோடு இனி வாழும் காலத்திலும் கடந்த காலத்தில் செய்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி பெருமாளே கதி என சரணடைந்து, மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து, புண்ணிய காரியங்கள், நல்ல எண்ணங்களுடன் வாழ்கிறோரோ அவரின் பாவங்கள் மட்டுமே ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கும்.
பொருளாதாரத்தில் நிலையான தன்மையை உறுதி செய்வதற்கு பாபவிமோசனி ஏகாதசி அன்று மாலையில் பெருமாளுக்கு முன் நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, கடலை மாவில் செய்த லட்டுக்களை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கும் விநியோகிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் ஒரு போதும் பொருளாதார நெருக்கடிகள் அல்லது பணம் தொடர்பான சிரமங்கள் ஏற்படாது. பெருமாளின் மனம் மகிழ்ந்து அருள் வழங்குவதால் வாழ்க்கையில் செழிப்பும், பணத்தை ஈர்க்கும் தன்மையும் அதிகரிக்கும்.
யாராவது ஒருவருக்கு கடனான கொடுத்த பணமோ அல்லது நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கிய போன்ற தொகையோ கைக்கு கிடைப்பதற்கு பாபவிமோசனி ஏகாதசி அன்று வீட்டிற்கு அருகில் ஒரு குழி தோண்டி, அதில் கோமதி சக்கரத்தை உள்ளே வைத்து, பெருமாளுக்குரிய துதிகளை அன்றைய தினம் பாடி,சிக்கிக் கொண்டிருக்கும் உங்கள் பணம் விரைவில் வர வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரம் தடைபட்ட பணத்தை மீட்க உதவும். இதனால் நிதி ஆதாரமும் அதிகரிக்கும். பெருமாளின் அருளால் பணக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
வாழ்க்கை துணையுடனான பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படுவதற்கு, பாபமோசனி ஏகாதசி அன்று ஐந்து சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பால் பாயாசம் செய்து சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் திருமண வாழ்க்கையில் அமைதி, ஒற்றுமை ஆகியவை ஏற்படும். சுமங்கலி பெண்களின் மனம் மகிழ்ந்து, குளிர்வதை போல் உங்களின் வாழ்விலும், உறவிலும் இனிமை சேரும். பாசம் அதிகரிக்கும். உறவு பலப்படும்.
பாபமோசனி ஏகாதசி அன்று பெருமாளை வழிபடும் போது, உங்கள் குழந்தைகளையும் உங்களுடன் உட்கார வைக்க வேண்டும். தொடர்ந்து 12 நாட்கள் அவர்களின் நெற்றியில், பெருமாளுக்கு சாற்றிய அல்லது பெருமாளின் திருவடிகளில் வைத்த சந்தனத்தை வைத்து விடுங்கள். இந்த பரிகாரம் உங்களின் குழந்தைகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவதுடன், அவர்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய உதவும். வழிபாட்டில் குழந்தைகளையும் ஈடுபடுத்துவதால் ஆன்மிக வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியும் ஏற்படும்.
பாபமோசனி ஏகாதசி அன்று ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் சேர்த்து, அதில் ஒரு நாணயத்தை விடுங்கள். பானையை ஏழு முறை உங்கள் தலையை சுற்றி, பின்னர் ஓடும் நீரில் அதை நீருடன் நாணயத்தையும் விட்டு விடுங்கள். இந்த பரிகாரம் திருமண உறவில் சிறப்பான ஒற்றுமையை ஏற்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். இந்த பரிகாரத்தை செய்வதால் திருமண துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். உறவு பலப்படும்.
பாபமோசனி ஏகாதசியன்று பெருமாள் கோவிலுக்கு சென்று நல்ல வாசனை மிகுந்த திரவியத்தை தானமாக கொடுங்கள். பெருமாளுக்கு படைத்த அந்த வாசனை திரவியத்தில் சிறிதளவு தொட்டு நீங்களும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இதனால் சமூகத்தில் தனித்துவமான அவையாளம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அதிகரிக்க உதவும். பெருமாளுக்கு வாசனை திரவியங்கள் வழங்குவதன் மூலம் நேர்மறையான ஆற்றல்களை ஈர்க்க உதவும்.
பாபமோசனி ஏகாதசி அன்று பெருமாளுக்கு குங்குமப்பூ கலந்த பால் படைத்து வழிபட வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்று, மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க துவங்கும். இது எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவும், அமைதியான மற்றும் நம்பிக்கையான மனநிலையை வளர்க்கவும் உதவும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவதற்கு பாபமோசனி ஏகாதசி அன்று பெருமாளை வழிபடும் போது ஒரு துண்டு மஞ்சள் படைத்து வழிபடுங்கள். மறுநாள் அந்த மஞ்சளை மஞ்சள் துணியில் சுற்றி, அதை எப்போதும் உங்கள் உடன் வைத்திருங்கள். இந்த பரிகாரம் உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை கொடுக்கும். அதோடு செழிப்பு, வளர்ச்சி, அதிர்ஷ்டத்தையும் பெற்றுத் தரும்.