1. Home
  2. தமிழ்நாடு

சொத்து வரி உயர்வு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்..!

1

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள் சொத்துவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு உயர்வுகளை தமிழக மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே வருகின்றனர்.

இது போதாது என்று, ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்த திமுக அரசு வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற தொடர் உயர்வுகள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 6 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சொத்து வரியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான். சொத்து வரி மூலம் ஏற்படும் இழப்பினை சரி செய்யும் வகையில், வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையினை உயர்த்தும் நிலைமை உருவாகும்.

இது மட்டுமல்லாமல், வணிகர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தும் சூழ்நிலை உருவாகும். தொடர்ந்து மக்களுக்கு துன்பங்களை கொடுக்கின்ற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. விடியலை நோக்கி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. விரக்தியின் விளிம்பிற்கு மக்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான் என்பதை நன்கு அறிந்தும், தி.மு.க. அரசு வீட்டு வரியினை உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது.

ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சொத்து வரியை 6 விழுக்காடு உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் கோரியுள்ள அனுமதியினை நிராகரிக்க வேண்டுமென்று ஸ்டாலினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like