பன்னீர்செல்வம் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் ட்விஸ்ட்..!

சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுகிறார்.
அவர் தலைமறைவான நிலையில் சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தனது சகோதரர் தென்னரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், அதற்காக திட்டமிட்டு காத்திருப்பதாகவும் உளவுப்பிரிவு போலீசார், எச்சரித்ததையடுத்து போலீசார் கடந்த ஒரு மாதகாலமாக தீவிரமாக தேடி வந்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன்.
தனது சகோதரர் கொலைக்கு பழிவாங்க ஆற்காடு சுரேஷை கடந்த 2023 ஆம் ஆண்டு கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பழிக்குப் பழி வாங்க, பாம் சரவணன் ஸ்கெட்ச் போட்டு வந்ததாக தகவல் கிடைத்து அதன் பேரில் தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி நேற்று கைது செய்தனர்.
சரவணன் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையின் புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், போலீசாரிடம் 'பாம்' சரவணன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அண்ணன் தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் என்பவரை எரித்துக் கொன்றதாக, போலீசாரிடம் ரவுடி பாம் சரவணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் பன்னீர்செல்வம் காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது நண்பரான வழக்கறிஞர் ராஜேஷ் உடன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை எரித்து கொலை செய்ததாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. பன்னீர்செல்வம் கொலை தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.