பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
தேர்தல் வாக்குறுதிகள், தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி என அனைத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இதே நடைமுறையை பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதிலும் திமுக அரசு கையாண்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை சமூகநீதி, கூட்டாட்சி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது எனத் தெரிவித்து, அதனை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கூறியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையிலும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கென தனியே மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்காக குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறவே 3 ஆண்டுகள் ஆனது. இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்பே, பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு தலைமைச்செயலர் எழுதிய கடிதத்தில், பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதில் தமிழகம் மிகவும் ஆர்வமாக உள்ளதாக கூறி, புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024-25ல் போடப்படும் என குறிப்பிட்டு 2023-24ம் ஆண்டுக்கான நிதியை விடுவிக்க கேட்டுக் கொண்டார். இது திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
திமுக அரசு சொல்வதைத்தான் குழுக்களும் பரிந்துரைக்கும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற கடிதம் தலைமைச்செயலரால் எழுதப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. எந்த ஒரு கொள்கையிலும் வெளிப்படைத்தன்மையுடன் திமுக நடந்து கொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மக்களை ஏமாற்றுவது போல் மத்திய அரசையும் ஏமாற்றி நிதியைப் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதா அல்லது சமூகநீதி, மொழிக் கொள்கை, சமத்துவம், கூட்டாட்சி ஆகியவற்றை காவு கொடுத்தாவது தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துவிடலாம் என்ற நோக்கில் கடிதம் எழுதப்பட்டதா என்பதை திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மேலும், பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவின் பரிந்துரை விவரத்தை திமுக அரசு மக்களுக்கு ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.