ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. நிதியில்லை என தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் !!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடிலம் பஞ்சாயத்து தலைவராக திமுகவைச் சேர்ந்த தீபா அன்பழகன் என்பவர் உள்ளார்.
இவர் தன்னுடைய கிராமப் பஞ்சாயத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கவில்லை எனவும், இதனால் கிராமத்தில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்டவற்றை செய்து தர இயலவில்லை எனவும் தெரிவிக்கிறார்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், கிராம பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்றுள்ளனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்காததால், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீபா தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in