பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும்..!
காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: பாகிஸ்தான், தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. 1960ல் இந்திய-பாகிஸ்தான் நதி நீர் ஒப்பந்தத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இப்படியே தொடர்ந்தால், இப்போது பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கும் பாகிஸ்தான், வரும் காலங்களில் ஓவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அந்நாடு மூன்றாக உடையும்.
பாகிஸ்தான், தற்போது இரண்டு காரணங்களுக்காக, தத்தளித்து வருகிறது. அந்த நாடு, அதன் சொந்த செயல்பாடுகளாலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அந்நியர்களைப் போல நடத்துவதால், அந்த மாநிலத்தவர்கள் யாரும், பாகிஸ்தானுடன் இணைந்திருக்க விரும்பவில்லை.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டுப் பாகிஸ்தான் விலக வேண்டும். பா.ஜ., அரசின் நடவடிக்கையால், சிறப்பு அந்தஸ்து தரும் 370வது பிரிவு மற்றும் 35 ஏ ரத்து நடவடிக்கையால், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ஊழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எளிதாக அங்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், தற்போது பயங்கரவாதம் அச்சுறுத்தலிலிருந்து மாறிச் சுற்றுலாதலமாக மீண்டும் மாறி வருகிறது. மேலும் டில்லி-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்த பகர்வால், குஜ்ஜார், தலித் மற்றும் வால்மீகி சமுதாய பிரிவினர், நீண்ட காலமாக உரிமைகளைப் பெறக்கூட முடியாமல் தவித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கையால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.காஷ்மீரில் ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கும், டில்லிக்குமே படையெடுத்தனர். ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை மறந்துவிட்டனர்.இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.