அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க கோரிக்கை வைத்த பாகிஸ்தான்...!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.பின்னர் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தியா, பாகிஸ்தான் மீதான தாக்குதலை கைவிட்டது.
இதற்கிடையே சமூக வலைதளத்தில் இந்தியா, பாகிஸ்தான் போரை தாம்தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்தட்டிக் கொண்டார். இது மிகவும் பேசுபொருளாக மாறியது. இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் குறுக்கீட்டுக்கு தாங்கள் அனுமதிக்கவில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், அமெரிக்கா அந்தக் கருத்தை திரும்பப் பெறவில்லை.
இந்த நிலையில் ஜி 7 மாநாடு கனடாவின் கனானாஸ்கி நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். அப்போது பாகிஸ்தான் விவகாரத்தில் தேவையில்லாமல் அமெரிக்கா மூக்கை நுழைத்தது தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச இருந்ததாக தகவல் வெளியானது.
இதற்கிடையே ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக டிரம்ப், ஜி7 மாநாட்டில் முழுமையாக பங்கேற்காமல் ஒருநாள் முன்னதாகவே வாஷிங்டன் திரும்பிவிட்டார். அதன் பின்னர் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் ஏறத்தாழ 35 நிமிடங்கள் உரையாடினர்.அப்போது இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டுக்கு தாங்கள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை என பிரதமர் மோடி, டிரம்பிடம் திட்டவட்டமாகதெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் விலகி இருக்குமாறு அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஒரு கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.அதாவது, "நான்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆன போரை முடிவுக்கு கொண்டு வந்தேன். எனக்கு பாகிஸ்தான் மிகவும் பிடித்தமான நாடு. அதேசமயம், பிரதமர் மோடியும் எனது நண்பர். அதனால் தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தேன்" என டொனால்டு டிரம்ப் பதிவிட்டு இருந்தது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பாகிஸ்தான் மீது டொனால்ட் டிரம்ப் திடீரென பாசம் காட்டுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி முனீர் அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் டொனால்ட் டிரம்ப் உடன் நேற்று மதிய உணவு உட்கொண்டார். இதனால் தான் பாகிஸ்தானை குளிர்விக்கும் விதத்தில் இவ்வாறு டிரம்ப் கருத்து தெரிவித்ததாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவரும் இதே பாகிஸ்தான் தலைமை தளபதி முசிர் தான்.
அவரது மனம் குளிரும் வகையிலேயே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு நடந்து கொள்வதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். அதேசமயம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் பழக்கத்தை அமெரிக்கா வழக்கமாகவே கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்காவுக்கு வருகை தருமாறும் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்க மறுத்த பிரதமர் மோடி, திட்டமிட்டவாறு தனது பயணத்தை முடிக்கப் போவதாக கூறினார். அந்த வகையில் கனடா பயணத்தை முடித்துக் கொண்டு குரோட்டியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.
நிகழாண்டு இந்தியாவில் க்வாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை டிரம்ப் ஏற்றுக் கொண்டு இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.