பாக். தாக்குதலில் 2 இந்திய மாணவர்கள் பலி..!
வெளியுறவு அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இதில், தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ”இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. பொய்த் தகவல் மூலம் உலகை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பாகிஸ்தான் பொய் சொல்கிறது என சாடிய அவர், பொய்கள் மூலம் மதவாத பிரச்னையை தூண்டுவதற்கு அது முயல்கிறது என தெரிவித்தார். தவறான தகவல் மூலம் உலகை ஏமாற்றும் கீழான நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் சென்றுவிட்டது என்றார்.
ஆனால், நேற்றைய தினம் பூஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றையும் பாகிஸ்தான் தாக்கியது. பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலியாகினர் மற்றும் அவர்களது பெற்றோர் காயமடைந்தனர் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானுக்கு, 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐஎம்எஃப் (IMF) அமைப்பு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்த சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடியுள்ளது இந்தியா. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது” என்று கூறினார்.