எனது சொந்த மாவட்டத்திலேயே போதைப் பொருட்கள் தடை இல்லாமல் கிடைப்பது வேதனை அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
சேலத்தை அடுத்த எடப்பாடியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப் படை சாகச நிகழ்ச்சியை காண வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனால், மக்கள் லட்சக்கணக்கானோர் கூடினர். ஆனால், போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் அரசின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் 60 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு உப தொழிலாக இருக்கும் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, தலைவாசலில் மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆராய்ச்சிப் பூங்காவுக்கு தேவையான தனி குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றினோம். ஆராய்ச்சிப் பூங்காவுக்கான நீரை, சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை ரத்து செய்வோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால், கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை திமுக அரசு திறக்கவில்லை.
சேலத்தில் போதை ஊசி பயன்படுத்துவோர் குறித்து செய்தி வெளியாகிறது. எனது சொந்த மாவட்டத்திலேயே போதைப் பொருட்கள் தடை இல்லாமல் கிடைப்பது வேதனை அளிக்கிறது. ஈரோட்டில், கல்லூரி அருகே போதைப்பொருள் விற்றவர்கள் மீது, எனது நண்பரான கல்லூரி தாளாளர் ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், சில நாட்களில் அவர்கள் மீண்டும் போதைப்பொருட்களை விற்கத் தொடங்கியதுடன், கல்லூரி தாளாளரையும் மிரட்டியுள்ளனர். அதிகாரிகள், போலீஸார் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், போதைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து எங்களை நாடித்தான் ஆக வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். போதைப் பொருள் விற்பனையை அரசால் தடுக்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை, மாதக்கணக்கில் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் மழைநீர் வடிகால் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், அடுத்து வந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் பணிகளை முடிக்காமல் உள்ளது. இதேபோல், 2-வது மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசிடம், திமுக அரசு முறையாக நிதி பெறாமல் விட்டது. இல்லையென்றால், திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். திமுக-வின் 40 மாத ஆட்சியில், தமிழகத்தின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக கூறினார்கள். இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது ஏமாற்று வேலை. சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வரும், இங்குள்ள துணை முதல்வரும் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். கருத்து மோதல் தான் சென்று கொண்டிருக்கிறது. இதற்கான இறுதித் தீர்ப்பை மக்களே அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.